July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொகுசு கார் வழக்கு; நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை!

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய், 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, ‘நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி,ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.

மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்காத நிலையில் தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு தனி நீதிபதியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித் துறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாலும் அதனை 7 முதல் 10 நாட்களுக்குள் செலுத்தத் தயாராக இருக்கிறோம்” எனவும் வாதிட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, எஞ்சியுள்ள 80 சதவீதத்தை ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.