January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”: முரளிதரன்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘800’ என்ற படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தமான நாள் முதல் பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதியை அப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்து “நன்றி- வணக்கம்” என குறிப்பிட்டு விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன் மீது ஏற்பட்டுள்ள தவறான புரிதலினால், “800″ படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்று தனது அறிக்கையில் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, அவரை இந்தத் திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘800’ திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும், உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே, தாம் சம்மதித்ததாகவும் அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘800’ படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தான் உறுதுணையாக இருப்பதாகவும் முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.