
தனித்துவமான கதையம்சங்களை கொண்ட திரைப் படங்களை இயக்குவதன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இயக்குனர் மிஷ்கின்.
இவரது இயக்கத்தில் வெளியான ”அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய திரைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.
இந்நிலையில்,அடுத்து அவர் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் கார்த்திக்ராஜா இசையமைக்க இருப்பதாகவும் இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன.
மேலும் அடுத்த மாதம் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கான பாடல்களை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் ஆலோசனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். குறித்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது
கடந்த ஆண்டு தயாராகி தற்போது வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு பின்னர் கார்த்திக் ராஜா இசையமைக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.