January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான்-கிரண் விவாகரத்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் மற்றும் தயாரிப்பாளர்-இயக்குனர் கிரண் ராவ் தமது 15 வருட திருமண உறவை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திரமான நடிகர் அமீர் கான் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக உள்ளார்.

அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கான், 56, மற்றும் ராவ், 47, விவாகரத்து செய்ய உள்ளதாக நேற்று (03) கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளமை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அமீர்கான் – கிரண் இணைந்து மீண்டும் தமது ரசிகர்களுக்கு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், தங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்றும் ஆனால் தாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே சந்தோஷமாக உள்ளோம் என்றும் அமீர்கான் கூறியுள்ளார்.

கணவன் – மனைவி என்கிற உறவை மட்டுமே தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளோம் எனக் கூறிய அவர், மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம் என தெரிவித்த அவர், ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

அத்தோடு, விவாகரத்து செய்து கொண்டாலும் தங்கள் மகனை ஒன்றாக வளர்க்க உள்ளதாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அறிக்கையில்,

“இந்த 15 ஆண்டுகால உறவில் எங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டோம்.

எங்கள் உறவு அன்பு, மரியாதை,நம்பிக்கை ஆகியவற்றால் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். ஆனால், கணவன் மனைவியாக அல்ல.

இனி தனித்தனியாக வாழ்ந்தாலும் குழந்தைக்கு இணை பெற்றோர்களாக குடும்பமாக இருப்போம். இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள்” என கூறியுள்ளனர்.

7 தேசிய விருதுகளை வென்ற ‘லகான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை 2001 இல் அமீர்கான் சந்தித்தார்.நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முன்னதாக கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை அமீர்கான் காதல் திருமணம் செய்தார்.எனினும் 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். கான் மற்றும் ரீனா தத்தாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.