January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘அண்ணாத்த, வலிமை’ திரைப்படங்கள்

இந்த வருடம் தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த மற்றும் வலிமை’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பொது நிகழ்ச்சிகளில் தல அஜித்தின் வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

அதற்கமைய இம்மாதம் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர்களை வெளியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இதனால் இரு திரைப்படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும் முன்னைய வருடங்கள் போல் திரையரங்குகள் இருந்தால் போட்டி இருக்கிறது என சொல்லலாம்.

ஆனால் கடந்த இரு வருடங்களாக ஓடிடியே முன்னிலையில் இருக்கிறது. அதனால் வீடுகளிலேயே இருந்தவாறு படங்களையும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை சிவா இயக்கியுள்ளதுடன் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தில் இன்னும் சில காட்சிகள் தான் படப்பிடிப்பிற்கு மீதம் இருப்பதால், படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரும்பியவுடன், இறுதிக் கட்டப் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதுடன், தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இதனிடையே அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் தொல்லையால், கடந்த வருடம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனினும் கொரோனா காரணமாக வெளியிடப்படவில்லை என அறிவிப்பு வந்தது.

தற்போது வலிமை பட பணிகள் யாவும் நிறைவுற்று வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இம்மாதம் 2 ஆவது வாரத்தில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.