
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தலைவி.
இப்படத்தின் பணிகள் நிறைவுற்று வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா காரணமாக பட வெளியீடு பிற்போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது தலைவி படத்திற்கான தணிக்கை சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் தலைவி படம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
இவருடன் எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி, சசிகலாவாக மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி எப்போது வெளியாகும் என தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும் காத்திருந்தனர்.இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஏப்ரல் 23-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் தலைவி பட வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் ஓரளவு குறையத் தொடங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், மீண்டும் தலைவி படக்குழு பட வெளியீட்டுக்கான பணிகளில் தீவிரமாகியுள்ளது.
பட தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் தலைவி திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது .
தமிழ், தெலுங்கு, இந்தி , மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.