January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் உணர்வுகளை நடிகர் விஜய் சேதுபதி மதிக்க வேண்டும்; கடம்பூர் ராஜூ வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் உணர்வுகளை நடிகர் விஜய் சேதுபதி மதிக்க வேண்டும் என்றும், ‘800’ திரைப்படத்தில் நடிப்பது தொடர்பில் புரிந்து நடந்துகொண்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது” என்று கூறியுள்ளார்.

“உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பலதரப்பட்டவர்கள் மத்தியிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக அமைச்சர் ஒருவரிடமிருந்து வெளியாகியுள்ள முதல் கருத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.