November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் திரையிடப்படும் த கிரேட் இந்தியன் கிச்சன்

ஓடிடி தளத்தில் வெளியான மலையாள திரைப்படமான த கிரேட் இந்தியன் கிச்சன் ஜப்பான் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் விநியோக உரிமை ஜப்பான் தியேட்டர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக த கிரேட் இந்தியன் கிச்சன் தயாரிப்பாளர் ஜோமன் ஜேக்கப் கூறியுள்ளார்.

இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் உருவான இப்படம் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகியது.தற்போது இப்படத்தை அமேசன் பிரைமிலும் காணலாம்.

ஜப்பானில் கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஓடிடி தளமான நீஸ்ட்ரீமில் த கிரேட் இந்தியன் கிச்சன் வெளியானபோதே படத்தை கேட்டு சர்வதேச அளவில் அழைப்புகள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் ஜப்பான் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பால் அது தடைப்பட்டதாகவும், திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படம் வெளியாகும் எனவும் ஜப்பானிய வசனங்களுடன் படத்தை திரையிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இப்படம் கருத்தியல் ரீதியாகவும்,உணர்ச்சிபூர்வமிக்க வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்தது.

விமர்சன ரீதியாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திய மலையாளத் திரைப்படம் தான் இந்த த கிரேட் இந்தியன் கிச்சன்.

இந்தியாவை பொறுத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எவ்வாறு அமையப் பெற்றிருக்கிறது,ஒரு பெண்ணின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பது குறித்த ஆழமான கருத்தை மக்களிடைய கொண்டு சென்ற படம்.

இந்தியப் பெண்களின் யதார்த்த வாழ்வியல் சிக்கலை மிக அழுத்தம் திருத்தமாக படம் பிடித்து காட்டிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் உச்சநீதிமன்ற நீதிபதி முதல் நாட்டு தலைவர்கள்,அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.