விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘800’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்தப் படம் தொடர்பிலும் தன் மீதான விமர்சனங்கள் பற்றியும் விளக்கமளித்து இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய படத் தயாரிப்பு நிறுவனமொன்று தன்னைப் பற்றி படம் எடுப்பதற்காக அணுகியபோது, தான் முதலில் அதனை ஏற்கத் தயங்கியதாகவும், ஆனால் தனது தனிப்பட்ட சாதனைகளையும் தாண்டி தனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக அதனைக் கருதி சம்மதம் தெரிவித்ததாகவும் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தேயிலைத் தோட்டக் கூலியாட்களாக வாழ்க்கையைத் தொடங்கிய தனது குடும்பத்தினர், உள்நாட்டுப் போரில் உறவுகளை இழந்துள்ளதாகவும் பல தடவைகள் வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியானதாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.
“போரினால் ஏற்படும் இழப்பையும், வலியையும் என்னால் புரிந்துகொள்ள முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய போர்ச் சூழ்நிலையில், நாட்டின் கிரிக்கெட் அணியில் தான் இடம்பிடித்து புரிந்த சாதனை பற்றிய படமே ‘800’ என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தான் பேசிய சில கருத்துகள் தவறாக திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு தான் தன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று தான் கூறியது, “தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்” என்று திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“போர் முடிவுற்றதை ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், போரினால் பாதிக்கப்பட்டு இரு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தினைத் தெரிவித்தேன்.ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்” என்று முரளி கூறியுள்ளார்.
தனது பள்ளிக் காலம் முதலே தான் தமிழ் வழியில் படித்து வளர்ந்ததாகவும் தனக்குத் தமிழ் தெரியாது என்று கூறுவது மற்றொரு தவறான செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அறியாமையாலும், அரசியல் காரணங்களுக்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வாறான விளக்கங்களை கொடுத்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது. இருந்தாலும் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டுவரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்” என்றும் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.