இந்தியாவை கடந்து உலகம் முழுவதிலும் கவனம் பெற்ற திரைப்படம்தான் கேஜிஎப். யாஷ் கதாநாயகனாக நடித்த இந்த கன்னட திரைப்படம், பெரும்பான்மையான இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது.
2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பாகிஸ்தானிலும் கூட மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனால் உற்சாகம் அடைந்த படக்குழுவினர் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தயாரிக்க தொடங்கினர்.
இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் என்று படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுமைக்குமான நடிகர்-நடிகைகள் இடம்பெற்றிருந்தனர்.முதல் பகுதியில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இந்த இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
அண்மையில் கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து,ஜூலை 16 இல் கேஜிஎப் சாப்டர் 2 ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்ட படக்குழுவினர் ஜூலை 16 ஆம் திகதி படம் வெளியாகாது என்று அறிவித்துள்ளனர்.மேலும் சூழ்நிலையை பொறுத்து புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.