October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியன்-2 பட தயாரிப்பு பணி நஷ்டத்துக்கு நான் காரணமல்ல’; இயக்குநர் ஷங்கர் மனு

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்- 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனையடுத்து பதில் மனு தாக்கல் செய்திருக்கும் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 பட தயாரிப்பு நஷ்டத்திற்கு தான் காரணமல்ல என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அதனைக்கருத்தில் கொள்ளாத தயாரிப்பு நிறுவனம் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என இயக்குநர் ஷங்கர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை லைகா நிறுவனம் தான் வீணடித்ததாகவும், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டதாகவும் ஆனால் லைகா நிறுவனத்தின் வேண்டுகோளின்படி பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்ததாகவும் இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதில் லைகா நிறுவனமே காலதாமதத்தை ஏற்படுத்தியதாகவும் நிதி ஒதுக்கீடு, அரங்குகள் அமைத்து தருதல் போன்றவற்றில் தயாரிப்பு நிறுவனம் கால தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கிரேன் விபத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கொரோனா தொற்று போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் இயக்குநர்  ஷங்கர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.