கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிப்படைந்த துறைகளில் முக்கியமான சினிமாத்துறையில் முதன்முதலில் மூடப்பட்டது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தான்.
இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் நிலைமை 2023 ஆம் ஆண்டளவில் தான் வழமைக்கு திரும்பும் என கிரிசில் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அவை மூடப்பட்டுவிட்டன.
திரையரங்குகள் 50%, 100% என இருக்கைகள் தளர்வுடன் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு, என பல கட்டுப்பாடுகள் போடப்பட்டதால் மீண்டும் திரையரங்குகள் முடங்கி, திரைத்துறையும் முடங்கியுள்ளது.
இந்த கொரோனா தாக்கத்திற்கு பிறகு சுமுகமான ஒரு சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் தான் 2023 ஆம் ஆண்டளவில் திரைத்துறை மீண்டெழும் என கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினிமா துறையை பொருத்தவரை பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 2020 முதல் திரையரங்குகள் பாரிய இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
நஷ்டத்தை சந்தித்து வரும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடியென வந்து விழுந்தது தான் OTT தளம்.
கொரோனா அச்சம் முழுமையாக குறைந்து, பெரிய அளவிலான பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெளியானால் மட்டுமே மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மீண்டெழும் என கிரிசில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.