May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசூல் வேட்டையில் கர்ணன்

1997களின் பின்னணியில் கர்ணன் படத்திற்கான களம் அமைந்திருப்பதை படத்தை பார்க்கும் போது புரிகிறது.

திருநெல்வேலி அருகே பொடியன்குளம் எனும் கிராமம் தான் கர்ணனின் கதைக்களமாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதிகார வர்க்கத்தின் அராஜக செயல்களை கண்டித்து அதற்காக வாள் ஏந்துகிறார் கர்ணன்.

கர்ணன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதாக சினிமா நட்சத்திரங்களும் ,ஆர்வலர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகார வர்க்கத்தின் வன்மத்தை அடக்க ,அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதை,காட்சிக்கு காட்சி வாள் ஏந்திய கர்ணனை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இயலாமையும்,கோபமும் கலந்த தனுஷின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது .

கர்ணனாக வரும் தனுஷ் ஒட்டுமொத்த படத்தையும் தன் கையில் இருக்கும் வாள்போலவே சுமந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

லட்சுமி பிரியா,ரஜிஷா உள்ளிட்டவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களோடு கலந்து மண்வாசனை வீசுவதால் படம் முழுமை பெறுவதை நாம் காணலாம் .

படத்தில் வருவதை போன்று, ஒரு நத்தை தன்னுயிரைக் காத்துக்கொள்ள தன் ஓடுகளை எப்படி ஆயுதமாக பயன்படுத்துமோ, அதே நியாயத்தை பதிவு செய்திருக்கிறது கர்ணன் .

தங்கள் ஊரில் பேருந்து நின்று செல்லக் கூடாதென,பக்கத்து ஊர் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து தடை செய்வதே, கர்ணன் ஏந்தும் வாளில் ரத்தம் உறைவதற்கும் காரணமாய் இருக்கும் யதார்த்த வாழ்வியலை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

படத்தின் கதையில் வரும் மீன் வெட்டு திருவிழா ,அந்த மண் சார்ந்த நிகழ்வுகள் ,தலை வெட்டப்பட்ட சாமி சிலை ,கால் கட்டப்பட்ட கழுதை என படம் முழுவதும் பாரம்பரிய குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

நடிகர் தனுஷின் சமீபகால படங்கள் என அனைத்தும் வெற்றிக் கொடியை நாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

அந்தவகையில் அசுரன் அதற்கு அடுத்ததாக கர்ணன் என தமிழ் சினிமாவில் போற்றத்தக்க இவ்வாறான திரைப்படங்கள் இன்னும் சமூகத்தை சீராக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.