July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசையுடன் இணைந்த காதல் கதை ’99 சாங்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 16 இல் வெளியாகிறது

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதை ’99 சாங்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

99 சாங்ஸ் திரைப்படம் எவ்வாறு உருவானது,என ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கிறார்.

இத்திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி ,தயாரித்திருக்கிறார்.தி தேவாரிஸ்ட்ஸ் மற்றும் பிரிங் ஆன் தி நைட் புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ரஹ்மானின் நிறுவனமான ஒய்.எம்.மூவிஸ் ஐடியல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

அனுபவம் வாய்ந்த இயக்குநரிடம் சென்றால், அவர்கள் தங்கள் அனுபவ அறிவைத் தருவார்கள்.ஆனால்,அதைவிட தனக்கு சுதந்திரம் முக்கியம் எனக் கூறியுள்ள ரஹ்மான் ,சின்ன சின்ன விஷயங்கள் தவறாகப் போனாலும், சரிசெய்து கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும்,அந்த இணக்கம் இந்த படக்குழுவால் கிடைத்தது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘99 சாங்ஸ்’ திரைப்படத்தில் நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடித்துள்ளார்.

பழைய மற்றும் புதிய உலகத்துடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸின் மையக்கரு என ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.

மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள், ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் போன்ற இசை மேதைகள் இத்திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளதாக ரஹ்மான் குறிப்பிட்டிருக்கிறார் .

இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி என அவர் கூறியுள்ளார்.

மேலும் 2010 ஆம் ஆண்டில் வந்த கதைக்கரு தான் இந்த 99 சாங்ஸ் என ரஹ்மான் குறிப்பிடுகிறார்.

ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுகள் எழுதினால் எப்படியிருக்கும்.அந்தக் கருவிலிருந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு இந்தக் கதையை உருவாக்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.