November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாதவனின் “ராக்கெட்ரி” திரைப்படம்; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள “ராக்கெட்ரி”  படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது பாராட்டை தெரிவித்துள்ளார்.

மாதவன் இயக்கி, நடித்துள்ள  இந்தப் படத்தின் டிரைலர் ஏப்ரல் 1 ஆம் திகதி அனைத்து மொழிகளிலும் வெளியானது.

சில வாரங்களுக்கு முன்  தானும் நம்பி நாராயணனும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ராக்கெட்ரி திரைப்படம் குறித்து பேசியதாக மாதவன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தின் காட்சிகள் குறித்தும், நம்பி நாராயணனுக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் பிரதமர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போய்விட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள மாதவன் கிடைத்த கௌரவத்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இந்தனை ரீ டுவிட் செய்துள்ள  பிரதமர் நரேந்திர மோடி “ராக்கெட்ரி” திரைப்படத்தின் காட்சிகளைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “புத்திசாலியான நம்பி நாராயணனை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த படம் ஒரு முக்கியமான விடயத்தை உள்ளடக்கியது.இது மக்கள் அறிந்திருக்க வேண்டியதும் கூட, எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நம் நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர், அதனை “ராக்கெட்ரி” காட்சிகளில்  நான் காண முடிந்தது” என பதிவிட்டுள்ளார்.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் சூர்யாவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாரூக் கானும்  கௌரவ வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

“ராக்கெட்ரி” ட்ரைலரை பார்த்த திரையுலகின் பிரபலங்கள் பலர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.