November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் இருக்கு…ஜெயா’; தலைவி பட டிரெய்லர் வெளியானது

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயா என எம்.ஜி.ஆர் அழைப்பது போன்று ஆரம்பமாகும் தலைவி பட ட்ரெய்லர் தாறுமாறு என்றுதான் சொல்ல வேண்டும்.

“ஒரு சினிமாக்காரிய வைச்சு எங்களுக்கு அரசியல் சொல்லி கொடுக்கிறதா?. இது ஆம்பளைங்க உலகம், ஆம்பளைங்க தான் ஆளனும், ஒரு பொம்பள கையில கட்சியை கொடுத்து பின்னாடி நிக்கணும்”
என வரும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் வசனங்கள் பழைய நினைவுகளுக்கு எங்களை கொண்டு செல்கிறது.

 

தலைவி பட டிரெய்லரை பார்க்கும்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில், அவரின் அரசியல் பிரவேசத்தின் ஆரம்பத்தில் முகம் கொடுத்த சவால்களையும், உண்மைச் சம்பவங்களையும் பிரதிபலிக்கிறது.
ஜெயலலிதா ஆரம்ப காலகட்டங்களில் சட்டசபையில் நுழைந்த அந்த தருணங்களை நினைவு கூருகிறது தலைவி பட டிரெய்லர்.

அரசியலின் ஆரம்ப காலகட்டங்களில் சட்டசபையில் உள்நுழைந்த ஜெயலலிதாவிற்கு அங்கு எதிர்க்கட்சியினர் அவருடைய சேலையை உருவி மானபங்கப்படுத்திய அந்த காட்சிகள் தலைவி பட டிரெய்லரில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மகாபாரதத்தில் பாஞ்சாலியின் புடவையை துரியோதனன் சொல்லி துச்சாதனன் துகிலுரியும் அந்த காட்சி இங்கே நினைவு படுத்துவதை நாம் பார்க்கமுடிகிறது.

அங்கிருந்து வீறுநடை போட்டு எழுந்த ஜெயலலிதாவின் அரசியல் பயணம் தான் தமிழக முதலமைச்சர் ஆனது முதல் தற்போது இருக்கிற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வரை.

“மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கும் இதேதான் நடந்தது.அவருடைய புடவையை இழுத்து அவமானப்படுத்தின கௌரவர்களோட கதைய முடிச்சு, கூந்தல முடிஞ்சு சபதத்த முடிச்சா …
அந்த மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் இருக்கு ….ஜெயா”

 

என வீரவசனம் பேசி நடித்துள்ள கங்கனா ரணாவத் கதாபாத்திரம் தீ போன்றது, நெருப்பாய் உழைத்திருக்கிறார் கங்கனா.

எம்.ஜி.ஆர் சடலத்தை பார்க்கவிடாமல் ஜெயலலிதாவை தடுப்பது என அரசியலில் தடைகளை தாண்டி, பெண்ணுக்கான அபரிமிதமான சக்தியை கொண்டு எதிர்க்கும் காட்சிகள், ஜெயலலிதாவின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்துகின்றன.

மெய்சிலிர்க்க வைக்கும் வசனங்களும், காட்சியமைப்புகளும் ஜெயலலிதா தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்களையும், வெற்றிகளையும் அவர் கடந்து வந்த பாதையையும் பதிவு செய்திருக்கிறது தலைவி.

“அம்மாவா பாத்தீங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும் ஆனா பொம்பளையா பாத்தீங்கன்னா” என மிரட்டும் ட்ரெயிலரில் ஜெயலலிதாவின் தனித்தன்மை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பு, வியக்க வைக்கும் வகையில் தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு முதலமைச்சராக எவ்வாறு செயல்படவேண்டும், ஜெயலலிதாவின் இயல்பான அந்த வாழ்க்கையை உள்வாங்கி மிகவும் கச்சிதமாக தனது கதாபாத்திரத்தை செய்து இருக்கிறார் கங்கனா ரணாவத்.

திரைப்படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது இயக்குனர் விஜய் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத், எம்.ஜி. ஆர். கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரவிந்த்சாமியின் கெட்டப், அவருடைய நடை, உடை பாவனை என அனைத்தும் எம்.ஜி.ஆரை போன்று தத்ரூபமாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

தலைவி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, மதுபாலா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியாக உள்ளது.

அரவிந்த்சாமியின் கம்பீர குரலில் ஜெயா என ஒலி எழுப்பி தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளின் பிரம்மாண்ட தன்மையாலும், கங்கனாவின் ஒவ்வொரு அசைவும் நம்மை மிரள வைக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் நிமிர்ந்து நின்று பேசும் ஜெயலலிதாவின் கம்பீரமும், வட மாநில அரசியல் தலைவருக்கு ஆங்கிலத்தில் பதிலடி கொடுக்கும் காட்சிகள் ரசனை மிகுந்தது .

ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை ,தலைவி பட ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாகிறது.அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எவ்வாறு சினிமாவில் ஜொலித்தார் ,அதனூடாக அவருடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு இருந்தது என்பதையும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அரவிந்த்சாமிக்கும் கங்கனாவுக்கும் இடையே நடக்கும் அந்த பழைய சினிமா படப்பிடிப்பு காட்சிகள் என ஜெயாவை எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசாக நிலைநிறுத்துகிறது.

கட்சிக் கொடி போன்ற சேலையை கட்டிக்கொண்டு புன்முறுவலோடு, வீறுநடை போடும் ஜெயலலிதாவை ,அரசியலில் அசிங்கப்படுத்தும் வார்த்தைகள், ஆணாதிக்கத்திற்கு இடையே வீறுகொண்டு எழுந்து ஒரு கட்சியின் தலைவராக முதலமைச்சர் ஆகியது இன்றும் பேசப்படுகிறது என்றால் அது ஜெயலலிதாவின் தனித்தன்மை என்றே கூற வேண்டும்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தலைவி படத்தின் ட்ரெய்லர்.
படத்திற்கு மிகப்பெரும் பலம் சேர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.தனது இசையின் மூலம் மாயம் செய்திருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

ஒளிப்பதிவாளரும் அதே போன்று தத்ரூபமாக காட்சிகளை படம்பிடித்து ஒருசேர ஜெயலலிதாவை வடிவமைத்திருக்கிறார். தலைவி பட ட்ரெய்லரை சினிமா ரசிகர்களும், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் அவரின் ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் தலைவி பட ட்ரெய்லரை மிகவும் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

தலைவியைத் திரையில் பார்க்க சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தலைவி வெற்றி நடை போடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.