October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன்,இமானுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு

67 ஆவது தேசிய திரைப்பட விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் இமான், நாக விஷால் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய திரைப்படத்துறைக்கான  67 ஆவது தேசிய விருதுகள் புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது.

கொரோனா நெருக்கடியால் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் ஒரு வருடம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில்,67 ஆவது தேசிய திரைப்பட விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் இமான், நாக விஷால் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை,சிறந்த நடிகருக்கான விருது அப்படத்தில் நடித்த தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்றது.

மேலும் அசுரன் திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.

“கேடி கருப்புதுரை” திரைப்படத்தில் நடித்த, நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் படத்தின் ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டிக்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் இசையமைப்பாளர் டி.இமானுக்கு விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.