November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசாந்த்- சிம்ரன் ஜோடி சேரும் “அந்தகன்” படப்பிடிப்பு ஆரம்பம்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் பிரஷாந்த், ஹிந்தி படமான “அந்தாதூன்” தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இதில் முக்கியமாக அந்தகன் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையும், இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கெனவே, பொன்னார் சங்கர், மம்பட்டியான், ஆணழகன், ஷாக், உள்ளிட்ட படங்களை பிரசாந்தை வைத்து இயக்கியிருந்தார் தியாகராஜன்.

2018-ஆம் ஆண்டு இந்தியில் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தாதூன் திரைப்படம், 450 கோடி ரூபாய் அளவில் மாபெரும் வசூல் செய்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்தது.

இந்தப் படத்தில் நடித்த ஆயூஷ்மான் குரானா சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார்.

சிறந்த திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பிரிவுகளில் மேலும் மூன்று தேசிய விருதுகளையும் இத் திரைப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். அவருடன் நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

“அந்தகன்” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரஷாந்த் பியானோ வாசிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்தகன் படத்தின் ஷூட்டிங்  தொடங்குவதாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் தனது உடல் எடையை குறைத்து இளமையாக காட்சியளிப்பது புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மிகவும் நீண்ட இடைவெளியின் பின்னர் பிரசாந்தை வைத்து அவரது தந்தையே இயக்கும் இந்த அந்தகன் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அதிலும் ஒரு காலத்தில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்து மீண்டும் நடிப்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.