January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் வெளியீடு

“முதன் முதல்ல தமிழ்நாட்டுக்கு வந்தன்… தமிழ்ல கதைச்சன் பிடிச்சு உள்ள தூக்கி போட்டுட்டாங்க”.. எனத் தொடங்கும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட டீஸர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி இந்த படத்தில் இலங்கை தமிழராக நடித்து இருப்பதை டீசரை பார்க்கும்போது யூகிக்க முடிகிறது .இலங்கை தமிழில் பேசி அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி .இருந்தபோதிலும் உச்சரிப்பு என்பது முற்று முழுதாக இலங்கை தமிழை ஒத்துப்போகிறதா என்று புரியவில்லை.

இலங்கையிலிருந்து ஒரு சிங்களப் பெயர் கொண்ட படகில் அவர் தமிழ்நாட்டுக்கு வருவதாக அந்த டீசர் ஆரம்பத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் நகர்கிறது.

படகு மூலமாக இலங்கையிலிருந்து ஒரு காலத்தில் தமிழகம் தப்பி வந்த ஒரு சிலரின் கதையை மையமாக வைத்து ,இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரும் விஜய்சேதுபதி என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார் என்பதே கதையின் கருவாக உள்ளது.

முதல்ல நீ யாரு என விவேக் விஜய் சேதுபதியை பார்த்து கேட்கும் கேள்வியே அதிகம் பேசப்படுகிறது.

இலங்கையில் இருந்து போர்க்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்,அவர்கள் முகம் கொடுத்த சவால்கள் என சில சம்பவங்கள் இந்த டீசரை பார்க்கும்போது நினைவூட்டுகிறது.

டீசரின் இறுதியில் நீ தமிழன் தான் என கூறும் போது விஜய் சேதுபதிக்கு விக்கல் வருவது போன்ற காட்சி சிறைக்குள் வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இது புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதை டீசரில் காணமுடிகிறது .கதை முழுவதும் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படம் சர்வதேச பிரச்சினை குறித்து பேசப்போகிறது என்றும் கூறப்படுகிறது.

எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர்கள் மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் ,நடிகைகள் ரித்விகா,மேகா ஆகாஷ், கனிகா மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் விஜய்சேதுபதி நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், இடம் பொருள் ஏவல், நெட்பிளிக்ஸின் நவரசா ,யாதும் ஊரே யாவரும் கேளிர் , துக்ளக் தர்பார் என ஏகப்பட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.