November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்;காடன் பட ட்ரெய்லர் வெளியீடு

வழக்கமாக செய்திகளில் மக்களின் வாழ்விடங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் என்று தான் செய்திகளை பார்த்திருப்போம். சற்று வித்தியாசமாக இந்த படத்தில் யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம் என விழிப்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.

யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள காடன் திரைப்படம்,மனித வாழ்வில் யானைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது .

காடன் பட ட்ரெய்லரில் யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம் என்ற வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

யானைகளின் வாழ்விடங்களில் மக்கள் குடியிருப்புகளை அமைத்து அதனை துன்புறுத்தல் செய்துவருவதாக இதில் காட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழில் கும்கி,மைனா, கயல் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் பிரபு சாலமன் தான் இந்த காடன் திரைப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார் .

விஷ்ணு விஷால்,ராணா டகுபாட்டி, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ளது.

காடன் திரைப்படம் மார்ச் 26 ம் திகதி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரோஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

காட்டு யானைகளின் வழித்தடத்தில் கார்ப்பரேட் உதவியுடன் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் ஆக்கிரமிப்பதையும், இதனால் பாதிக்கப்படும் யானைகளின் வாழ்வாதாரத்துக்காக, மக்கள் போராடுவதையும் ட்ரெய்லர் மூலமாக அறியமுடிகிறது.

இந்த திரைப்படம் இந்தியில் ஹாத்தி மெரெ சாத்தி, தெலுங்கில் ஆரண்யா என்ற பெயர்களில் வெளியாகிறது.

மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு கதையில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் பிரபு சாலமன் யானையை வைத்து இயக்கிய படம்தான் கும்கி .அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் விருதுகளை வாங்கி குவித்தது. அதேபோன்று இந்தப்படமும் பிரபு சாலமனுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.