January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி என்ற படத்தை கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அவர் நடிகராகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் தவிர்க்கமுடியாத ஒருவராக மாறியிருக்கிறார் .

இவர் தன்னுடைய மூன்றாவது படத்தை ஹிந்தி படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்வதற்கு தற்போது தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் ஹிந்தி மொழியில் வெளியான ’பதாய் ஹோ’ படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த முழுநீள நகைச்சுவை படத்தை ஆர்.ஜே. பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

நகைச்சுவை கதைகொண்ட ஹிந்தி படத்தில் ஆயூஷ்மான் குரானா, சன்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் .

இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், ஆர்.ஜே. பாலாஜி இயக்கவிருப்பதாகவும் இப்படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’என்ற தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது

இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் வீட்ல விசேஷங்க என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாக்யராஜிடம் அனுமதி பெற்ற பின்னர் இந்த படத்திற்கான தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது .