அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகனாக வலம் வரும் ‘வைகைப்புயல்’ வடிவேலு இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
“போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு”, ” எட்டணா இருந்தால் எட்டூருக்கு எம்பாட்டு கேட்கும்” என இவர் பாடிய பாடல் இன்னும் பிரபலம் ஆனாலும் இவர் பாடகர் மட்டுமல்ல இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.
உடலாலும் குரலாலும் நிரம்பி வழியும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர். மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இவரது நகைச்சுவை காட்சியைக் பார்த்தால் ஒரு 10 நிமிடங்களுக்கு வாய்விட்டு சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்
‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’ என்ற இவருடைய நகைச்சுவை வசனத்தை தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான குழந்தைகள் மழலை மொழியில் பேசுவதை நாம் இன்றளவும் இணையத்தில் காணக் கிடைக்கும்
ஒரு சந்திரன் ஒரு சூரியன் ஒரு எம்ஜிஆர் ஒரு கலைஞர் என்பதைப்போல தமிழ் சினிமாவில் ஒரு வைகைப்புயல் வடிவேலு தான்.
தற்போது நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரியின் உடல் மொழியையும் வசன உச்சரிப்புகளையும் சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், இம்சை அரசனின் தாக்கம் சூரியிடம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
இவரின் சில வசனங்கள், “ஏன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்”, “இந்த பாடர தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்” , “மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு” , “கொய்யால” “அது வேற வாய் இது நாற வாய்” , “ஒய் பிளட் சேம் பிளட்”
எனும் நடிகர் வடிவேலுவின் இதைப் போன்ற எண்ணற்ற திரை வசனங்கள் இன்று அன்றாட வாழ்வில் மக்களால் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளாக மாறியிருக்கிறது.
இத்தகைய அங்கீகாரம் அவருக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. நீண்ட கால சினிமா முயற்சிகள் ஒருபுறம் நடிகர் ராஜ்கிரணுக்கு உதவியாளராக மற்றொருபுறம் இப்படியான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு 1991ஆம் ஆண்டு ராஜ்கிரன் தயாரித்து கதாநாயகனாக நடித்த படமான என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அவருக்கு ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது.
இதில் நகைச்சுவை செய்யும் கதாபாத்திரத்தோடு பாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதை அவர் திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.
இதற்கு காரணம் சிறுவயதில் சிறு சிறு நாடகங்களை நண்பர்களுடன் இணைந்து தயாரித்து அதில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்த அனுபவம் படத்தில் அவருக்கு பெரிதும் உதவியது.
இதற்குப் பிறகு அவருடைய கடுமையான முயற்சியினால், சின்னகவுண்டர்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ , ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, சுந்தர புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, சச்சின், வசீகரா ,சுறா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ‘பாட்டாளி’, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுத்தந்தது.
காலத்தால் அழியாத நகைச்சுவை என்று தான் சொல்ல வேண்டும்.
இதில் தளபதி விஜய்யுடன் நடித்த ஏராளமான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதில் தளபதி விஜய்யும் ,வைகைப்புயல் வடிவேலும் இணைந்து அடிக்கும் லூட்டிகள் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் , பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் தன் வசம் ஈர்த்தது.
இந்த படங்களில் வரும் மிக முக்கிய காட்சிகள் மீண்டும் மீண்டும் மீம்ஸ் வடிவில் வருவது காமெடியின் முடிசூடா மன்னன் தனித் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.
அடுத்தவரின் உருவத்தையோ அல்லது அடுத்தவரின் உடல் அசைவுகளை வைத்து பரிகாசம் செய்யாமல் தன்னைத் தாழ்த்திக் கொண்டு நகைச்சுவை செய்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் இந்த வைகைபுயல் வல்லவர். அடுத்தவரிடம் அடி வாங்கி சரி சிரிக்க வைத்து விட வேண்டும் என்பதில் நோக்கம் கொண்டவர்.
சந்திரபாபு, நாகேஷ்,விகே ராமசாமி, பாலையா, எம் ஆர் ராதா, செந்தில், கவுண்டமணி, வெண்ணிறாடை மூர்த்தி என தனித்த அடையாளங்களாக விளங்கிய நகைச்சுவை நடிகர்களை போல இவர் தனக்கென ஒரு உடல்மொழியும், குரலில் தனித்த ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வசன உச்சரிப்பும் கொண்டு தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டார். இதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்த வெற்றி 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி என கதாநாயகனாக இவர் அந்தஸ்தை உயர்த்தியது.
போலி ரவுடியாக, திருடனாக, அரசியல்வாதியாக (வட்டச்செயலாளர் வண்டமுருகன் ஆக), குடும்பத் தலைவனாக , சிஐடி ஆக, அரசனாக, என இவர் ஏற்று நடிக்காத வேடங்களில் இல்லை என்றே சொல்லலாம். அத்தனையிலும் தன்னுடைய நகைச்சுவை முத்திரையைப் பதித்து விடுவார்.
பேச்சு வழக்கில் காணக்கிடைக்கும் வார்த்தைகளின் பின்னணியிலுள்ள நகைச்சுவையை, வெளிக்கொணர்வதில் இவர் வல்லவர். உதாரணமாக, “நாங்கல்லாம் பார்த்தாலே பத்திக்கும்” என்று சொல்வது , வட்டார வழக்கில் உள்ளது. இதை ஒரு படத்தில் தீப்பொறி திருமுகம் என்ற கதாபாத்திரத்தில் அமைத்து செய்திருப்பார்.
தான் சந்தித்த நபர்கள், பார்த்த சம்பவங்கள், வட்டார வழக்கு மொழியில் உள்ள எதுகை மோனைகள் என இவர் சிறந்த பார்வையாளராக இருந்து, அதிலிருந்து தனக்கான களத்தை அமைத்துக் கொண்டு, தன் பாணியில் நகைச்சுவை செய்து நம்மை மகிழ்விக்கிறார்.
2010ஆம் ஆண்டு வரையிலும் இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு இவர் அனைத்து படங்களிலும் நிறைந்து காணப்பட்டார் .இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி கதாநாயகர்களே இல்லை எனும் அளவிற்கு இவருடைய வெற்றி இருந்தது.
தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் வைகைப்புயலின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல, உடல்மொழியும் அவருடைய நடிப்புத்திறனும் என்றும் தனித்துவம் வாய்ந்தவையே.
‘ஸ்ட்ரஸ் பஸ்டர்’ எனும் மன அழுத்தத்திற்கான மருந்தாக இவருடைய காமெடி காட்சிகள் விளங்குகின்றன.
24 மணி நேரமும் இயங்கும் முழுநேர காமெடி தொலைக்காட்சிகளிலும் பாதி நேரத்தை இவர் நடித்த காட்சிகளே எடுத்துக் கொள்கின்றன.
குறிப்பாக மீம்ஸ் கிரியேட்டருக்கு இவர் தான் காட்பாதர் ஆக விளங்குகிறார் . இவர் இல்லாமல் மீம்ஸ்களை இல்லை எனும் அளவிற்கு இணையத்தளங்கள் வாட்ஸ்அப் பேஸ்புக் ட்விட்டர் என நீக்கமற நிறைந்திருக்கிறார் .
இப்படிப்பட்டவர் ஏன் திடீரென்று சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது மிகப்பெரிய கேள்வி.
விஜயகாந்துக்கும் இவருக்குமான சண்டை, திமுகாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, தன்னுடன் பணிபுரிந்த சக நடிகர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை, 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் எடுக்கும் தருவாயில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இவரை திரைத்துறையில் ஒதுக்கி வைத்தது என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது வடிவேலுக்கு மட்டுமே தெரியும்.
சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகின்ற இந்த பிரச்சனைகளையும் தாண்டி அண்மையில் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் மெர்சல் படத்தில் நடித்தார்.
ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியாக காமெடி காட்சிகள் அதில் இடம் பெறவில்லை. குணச்சித்திர நடிகர் ஆகவே அதில் அவர் தெரிந்தார்
இதைப்போன்றே ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ‘சிவலிங்கா’ படத்தில் நடித்தார். இதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இவருடைய காட்சிகள் எடுபடவில்லை.
இருப்பினும் திரை வாழ்க்கையில் மறுபடியும் ஒரு திருப்பதிற்காக கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் வைகைப்புயல்.
அந்த வகையில் தற்போது அவருக்கு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி அவர் தற்போது புதிய படங்கள் சிலவற்றில் நடித்து வருகின்றார்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, எனக்கு எண்டே கிடையாது என்று கூறிய வசனம் பிரபலமானது.
சமூக வலைதளங்களில் #HBDVadivelu என்கிற ஹேஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.