ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக -ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் (முன்னர் மெட்ராஸ் மாகாணம்) கொணடம்பேட்டை என்ற ஊரில் – 1946-ம் ஆண்டு ஜூன் 4-ம் திகதி பிறந்தார்.
தனது 20வது வயதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் சினிமா பின்னணி பாடகராக அவதாரம் எடுத்தார் எஸ்பிபி.பின்னர் கன்னட திரையுலகில் காலடி வைத்த அவர், 1969 இல் ஹோட்டல் ரம்பா திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ‘அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு’ ௭ன்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
(ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.) அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ‘இயற்கையெனும் இளையக்கன்னி’ பாடலைப் பாடினார்.
பின்னர் எம்ஜிஆர்-இன் அடிமைப் பெண் திரைப்படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு கடல்பாலம் என்ற திரைப்படத்தில் ’இ கடலும் மறு கடலும்’ பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார்.
சாதனைகள்
இதுவரை பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபி – (40 ஆயிரம் பாடல்களை தாண்டியபோது) உலக அளவில் அதிகூடிய பாடல்களைப் பாடியமைக்காக- கின்னஸ் சாதனையைப் படைத்தார்.
2001 இல் பத்மஶ்ரீ, 2011 இல் பத்மபூஷன் இந்திய அரசின் உயர் விருதுகளையும் 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருதையும் பெற்றார்.
தெலுங்கு(3), தமிழ்(1), ஹிந்தி (1) கன்னடம் (1) ஆகிய மொழிகளில் 6 தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும், சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பல தடவைகள் பிலிம்பேர் விருதுகளையும் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 தடவைகளும் பெற்றார்.
1981 ஆம் ஆண்டு கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.
மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரே நாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார்.
திரைப்பட பாடகராக மட்டுமல்லாது திரை இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் கலைஞர் எனப் பன்முக அடையாளம் கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், எல்லா முக்கிய தென்னிந்திய மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர்.
சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ‘பாடும் நிலா’ இன்று 2020 செப்டெம்பர் 25-ம் திகதி முதல் மௌனமாகிவிட்டது.
ஆனால், இந்த உலகம் உள்ளவரை அந்தக் காந்தக் குரல் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.