சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை, ஆகஸ்ட் 14 ஆம் திகதியளவில் மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் பின்னர் சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனபோதும் எஸ்.பி.பி.யின் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று மாலை மருத்துவமனையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானதாக சற்று முன்னர் மருத்துவமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.“எஸ்.பி.பி பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார்” என்று அவரது மகன் எஸ்.பி.சரண் ஊடகங்களிடம் தெரிவித்தார்.