January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கித் திணறும் இந்திய சினிமா உலகம்!

இந்தி திரைப்பட உலகை இப்போது ஆட்டிப் படைக்கும் விவகாரம் போதைப்பொருள் சர்ச்சை சில மாதங்களுக்கு முன்னர் பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தொடங்கிய விசாரணை இப்போது பல முன்னணி நட்சத்திரங்களையும் பெரும் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்க வைத்துள்ளது.

தற்போது சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகின்றது. சுஷாந்துக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், அதற்கு அவரது உதவியாளரும், காதலி ரியாவும் ரியாவின் சகோதரரும் உடந்தையாக இருந்துள்ளதாகக் கூறி அவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

ரியாவிடம் நடத்திய விசாரணையில் இந்தித் திரையுலகில் இன்னும் சிலருக்கும் போதைப் பழக்கம் இருப்பதாகவும் தெரியவந்தது. சாரா அலிகான்இ ஷ்ரத்தா கபூர் போன்றவர்களின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிபடத் தொடங்கின.

இந்த நடிகர்கள் இந்த வாரத்தில் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட திரையுலகிலும் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களையும் போதைப் பொருள் விவகாரத்தில் விசாரித்து வருகின்றனர்.

இப்போது உச்சகட்டமாக, சில வாட்சப் உரையாடல்களை ஆராய்ந்துள்ள அதிகாரிகள் முன்னணி நடிகை தீபிகா படுகோனும் அவருடைய மேனேஜரும் போதைப்பொருள் வாங்குவது பற்றி பேசியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இப்போது தீபிகாவின் மேனேஜரை விசாரித்து அதிகாரிகள் அடுத்து தீபிகாவிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விவகாரத்தில் இன்னும் பல தலைகள் உருளும் என்று தான் நம்பப்படுகின்றது