இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்கும் அதேநேரம், திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மேல் அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து முழு தகவல்களும் பின்னர் விரிவாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா முழுவதிலும் திரைப்பட கலைஞர்களின் சார்பாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன.
ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த விஷயத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. சில மாநில அரசுகள் அனுமதி அளித்தனர். ஆனாலும் நீதிமன்றங்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் முந்தைய 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிப்பது என்ற நிலையே தொடர்ந்தது.
இருப்பினும் பேருந்தில் பயணிப்பது,ரயில்களில் பயணிப்பது, ஷாப்பிங் மால்களில் இருப்பது போன்றவற்றை மேற்கோள்காட்டி, திரைத்துறையினர் சார்பாக கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன.
இதைத்தொடர்ந்து 50 சதவீதத்திற்கு மேல் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.