January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயம் ரவியின் பூமி: ஒரு பார்வை

பொங்கலை முன்னிட்டு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் படம் பூமி.

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பூமி படத்தில் ரோஹித் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமையா, சதீஷ், சரண்யா பொன்வண்ணன் என நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

விவசாயம் சம்பந்தப்பட்ட கதை, அதுவும் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் தற்போது விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் பூமி படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இயக்குனரால் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானி பூமி. இதில் பூமி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ஜெயம் ரவி. தன் சொந்த ஊரில் விவசாயம், அதை சந்தைப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனம் இவற்றுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை என்று எடுத்துக் கொண்ட களம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் காட்சி அமைப்பதில் நடைமுறை விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் நிலையையும் யதார்த்தத்தில் இருப்பது போன்று கொண்டுவர இயக்குனர் முயற்சி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

படத்திற்கு டட்லியின் கேமரா சற்று ஆறுதல் தருகிறது. டி இமான் இசை ஏதோ ஒன்று தேவை என்பதை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

படத்தை தலைப்புக்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் என்பதே சினிமா தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

பொதுவாக, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய விவசாயிகளுக்கான ஒரு திரைப்படம் என்ற வகையில் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.