July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்

பொதுவாக ஹிந்தி, தெலுங்கு,மலையாளப் படங்கள்தான் தமிழில் அதிகளவில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

ஆனால் அதற்கு மாறாக தமிழ் படமான மாஸ்டர் வெளியாகி 2 நாட்களுக்குள் ஹிந்தி மொழியில் ரீமேக்காக்கும் உரிமையை போட்டி போட்டு தயாரிப்பு நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கின்றன.

தளபதி விஜய்,விஜய் சேதுபதி நடிப்பில் லாேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் திகதி வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போடுகிறது.

மேலும் இப்படம் இரண்டாம் நாள் முடிவில் ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாய் அளவு வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 50 சதவீத இருக்கைகளே பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாஸ்டர் சாதனை படைத்துள்ளது என்றே கூறலாம். தமிழ் சினிமாவின் பெயரை காப்பாற்றிய படக்குழுவினருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் என அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே படத்தின் கதை, வசூல் வேட்டையை பார்த்து 3 நிறுவனங்கள் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளன.

எண்டமோல் ஷைன் இந்தியா,சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ரீமேக் உரிமையை வாங்கிய எண்டமோல் ஷைன் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அபிஷேக் ரீஜ் கூறுகையில்,
மாஸ்டர் திரைப்படம் ஒரு சிறந்த திரைப்படம்.அட்டகாசமான நடிப்பு,தரமான கதையம்சம் என ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலும் பாக்ஸ் ஆபிசில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் இணைத் தயாரிப்பாளரான செவன் ஸ்க்ரீன் லிலத் குமார்
கூறுகையில், ஒட்டுமொத்த திரையுலகிற்கும் வெற்றியாக மாஸ்டர் பார்க்கப்படுகிறது.நல்ல கதையம்சம், சிறந்த நடிகர் என புகழ்ந்துள்ள அவர்,மாஸ்டர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் ஹிந்தியில் மிகப் பெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாஸ்டர் படம் வெளியாகிய ஒரு நாளுக்குள் தனது தரத்தை நிரூபித்துள்ளதாகவும் இந்த பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஹிந்தி உரிமையை கைப்பற்றியிருக்கும் சினி 1 ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. ஹிந்தியில் மாஸ்டர் படத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே பல தடைகளைத் தாண்டி தரமான படைப்பாக வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.