January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செல்வராகவன்-தனுஷ் இணையும் “நானே வருவேன்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தற்போது நானே வருவேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி தனுஷ் நடிக்கவுள்ள தனது 12 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ட்வீட் செய்திருந்தார் செல்வராகவன்.

ஆனால் பொங்கலுக்கு முதல் நாளே அவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை
வெளியிட்டு இருக்கிறார். நானே வருவேன் போஸ்டரில், மயக்கம் என்ன படத்தில் வந்த தனுஷின் தோற்றம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பட போஸ்டரை பார்க்கும் போது ஒரு கேங்க்ஸ்டார் படம் போன்றே தெரிவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீபிரியா, ரகுமான் நடித்த படத்தின் பெயர் தான் ‘நானே வருவேன்’ . இந்நிலையில் மீண்டும் இந்தப் பெயர் கொண்ட படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

சகோதரர்களான தனுஷ்,செல்வராகவன் இருவரும் மயக்கமென்ன படத்திற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் நீண்ட நாள் அமைதிக்கு பிறகு தற்போது அடுத்தடுத்து அறிவிப்புகளை கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார் செல்வராகவன். அந்த படத்திலும் தனுஷ்தான் நடிக்க இருப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024ஆம் ஆண்டுதான் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

இந்நிலையில் தனுஷுடன் இணைந்து மற்றுமொரு படத்தை எடுக்க உள்ளதாகவும் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.

வி .கிரியேஷன்ஸ் பேனரில் எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்க உள்ளார். புதுப்பேட்டை இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு செல்வராகவனின் இந்த பட அறிவிப்பானது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.