January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பரிமாணத்தில் தளபதி விஜயின் மாஸ்டர்

சிறுவர் சீர்திருத்த பள்ளியின் ஆசிரியர் ஜோன் துரைராஜாக விஜயும், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன், இந்நாள் வில்லன் பவானியாக விஜய் சேதுபதியும் இணைந்து மிரட்டி இருக்கும் ஒரு தரமான சம்பவம் தான் மாஸ்டர்.

இந்த கொரோனா காலத்தில், தியேட்டரில் ரிலீஸ் செய்தால் முதலீடு செய்த பணம் திரும்ப வருமா? என்ற சந்தேகத்தில், முக்கிய நட்சத்திரங்களின், நிறைய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி கொண்டிருக்கும் இந்த வேளையில், தியேட்டரில் தான் ரிலீஸ் என்று உறுதியாக இருந்த விஜய்க்கு ஒரு சல்யூட் போட்டே ஆகவேண்டும்.

அவரின் நம்பிக்கையை பொய்யாக்காமல், திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை வாரி குவித்து வருகிறது மாஸ்டர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போன்றே ரசிகர்களை தாண்டி, எப்போதாவது படம் பார்க்க வரும் பொது ஜனங்களும், விஜய் படம் என்றால் ஒரு முறை பார்க்கலாம் என்று தியேட்டருக்கு வருவார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களையும் ஏமாற்றாமல் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

வழக்கமான விஜய் படங்களைப் போல் அல்லாமல், இந்தப்படம் இருப்பதற்கு ஆரம்ப காட்சிகளில் அதிரடியான வில்லனான, சேதுபதியின் அறிமுகமே, இது ஒரு வித்தியாசமான படம் என்பதை புரிய வைத்திருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தனித்தன்மையை மாநகரம், கைதி, ஆகிய படங்களில் நாம் கண்டிருக்கிறோம். அதன் மற்றுமொரு வடிவத்தை இந்தப்படத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.

சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என்று படம் முழுவதும் வரும் சிறிய மற்றும் பெரிய கதாபாத்திரங்கள் என அனைவரிடமும் மிகச்சிறப்பாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

விஜய், ஹீரோயிசம் இல்லாமல், ஹீரோயிசம் காட்டி இருக்கும் இந்த படத்தை பார்க்கும் பொழுது, கதைக்கு முக்கியத்துவம் தந்து, ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த நண்பன் படமும் நம் நினைவுக்கு வருகிறது.

விஜயின் ஸ்டைல், அவரின் நடனமாடும் திறமை, அவர் செய்யும் வலிமையான நகைச்சுவை என்று, வாத்தி கலக்கி இருக்கிறார் என்றால், ஹீரோ அளவிற்கு வில்லனும் வரிந்து கட்டி நடித்திருக்கிறார். இயல்பாகவே நக்கல் தொனியில், ஹீரோவாக நடிக்கும் சேதுபதி, வில்லனாக நடிக்கிறார் என்றால் கேட்கவே வேண்டாம் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் , அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்திற்கு,அதிலும் குறிப்பாக ஆகச் சிறந்த நடிகரான விஜய்சேதுபதிக்கு இடம் கொடுத்து நடித்திருப்பது, விஜய் அவர்களின் பக்குவப்பட்ட மனதையும், சினிமாவை, கதைகளை அவர் நேசிக்கும் மனப்பக்குவத்தையும் நமக்கு காட்டுகிறது.

ஒரு சீர்திருத்த பள்ளியின் முன்னாள் மாணவருக்கும், அங்கு வரும் ஆசிரியருக்கும் இடையில் நடக்கும் ஒரு பூசல் தான் கதை என்றாலும், அதை சிறப்பாக வடிவமைத்து, அதற்குரிய நடிகர்களை களமிறக்கி,மாஸ்டராக வெளிக் கொண்டுவந்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு, அவசியம் பாராட்டுகளை தெரிவித்தாகவே வேண்டும்.

விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி, பெரிதாக படம் பார்க்க மாட்டேன் என்று கூறும் ரசிகர்கள் கூட,ஒருமுறை மாஸ்டரை சென்று பார்த்துவிட்டு வந்தால், கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து ,மூன்று மணி நேரம் கண்டிப்பாக விடுதலை கிடைக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.