
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 ல் நான்காவது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ்.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் கடுமையான போட்டியாளர்கள் இருப்பார்கள் அந்த வகையில் இந்த வருடம் என்ன செய்தாவது இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி விட வேண்டும் என பாலாஜி விளையாடினார்.
கடந்த பிக்பாஸ் சீசனிலும் சரி, இந்த பிக்பாஸ் சீசனிலும் சரி மாடல்கள் பலர் பங்கேற்றிருந்தார்கள். ஆரவ், தர்ஷன், மீரா மிதுன் வரிசையில் இம்முறை பாலாஜியும் அந்த லிஸ்டில் சேர்ந்துகொண்டார்.
பார்ப்பதற்கு அசல் வட இந்திய இளைஞர் போல இருக்கும் பாலாஜியை ஆரம்பத்தில் எல்லோரும் அப்படித்தான் நினைத்தார்கள்.
ஆனால் அவர் தமிழ்நாட்டின் பசுமை கொஞ்சும் ஊரான தேனியில் பிறந்தவர்.
1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தேனியில் பிறந்த பாலாஜி முருகதாஸ் வளர்ந்ததெல்லாம் என்னவோ சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தான்.
கம்பியூட்டர் என்ஜினீயரிங் படித்த இவர் காலப்போக்கில் தான் ஆசைப்பட்ட மாடலிங் துறையில் பிரகாசிக்க தொடங்கியிருக்கிறார்.
கபடி வீரரான இவர் சிறுவயது முதலே உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். மாடலிங் துறையில் வளர்ந்து வரும் இவர், தனக்கு புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
வெளிவராத ஒரு திரைப்படத்திலும், ஆல்பம் சாங்ஸ் மற்றும் ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார் பாலாஜி. தற்போது அவர் நடிகை யாஷிகா உடன் இணைந்து சிறுத்தை சிவா படத்தில் நடித்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
2017ஆம் ஆண்டில் ‘மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி’ என்ற என்ற ஒரு டைட்டிலை வென்றிருக்கிறார் பாலாஜி. இதற்கு அடுத்த வருஷம் ‘மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா’ என்ற டைட்டிலை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது தன்னை அறிமுகப்படுத்திய பாலாஜி, ‘எனக்கு பிடிச்சமாதிரி இங்கு இருப்பேன், சிலருக்கு பிடிச்சிருக்கலாம், பிடிக்காமலும் போகலாம், பார்வையாளர்கள் முடிவு பண்ணட்டும்’ எனக் கூறியிருந்தார்.
முக்கியமாக பாலாஜி முருகதாசை பொருத்தவரை இந்த சீசன் 4 ல் மனதில் பட்டவற்றை வெளிப்படையாகப் பேசி, அடிக்கடி சண்டை போடுவது, அதகளப்படுத்துவது என நிகழ்ச்சியை எப்போதும் பரபரப்புடன் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
ஆரியுடன் அதிகம் மோதலில் ஈடுபட்டு ஆரி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் பாலாஜி. அதேநேரம், பாலாஜியின் இயல்பான குணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளமும் அவருக்கு உள்ளது.
இறுதிச் சுற்று வரை ஒவ்வொரு வாரமும் பல்வேறு யுக்திகளுடன் முன்னேறி வந்துள்ள பாலாஜி, தன் ஆசை போல பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்வாரா? இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.