November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக் பாஸ் சீசன் 4 இறுதிச் சுற்று: மக்கள் அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் ‘அழகிய தமிழ் மகன்’

கனவுகளைச் சுமந்து கொண்டு அவற்றுக்கான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் சோம் சேகர்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக போராடிவரும் சோம் சேகருக்கு தற்போது கிடைத்துள்ள களம் தான் பிக்பொஸ் சீசன் 4.

பிக் பொஸ் சீசன் 4 இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. சோம் சேகர் உட்பட இறுதிச் சுற்றில் ஐவர் இருக்கிறார்கள்.

“டிக்கெட் டு பினாலே” டாஸ்க் வாரத்தில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற சோம் சேகர் மக்கள் வாக்களிப்பின்றி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ளார்.

“டிக்கெட் டு பினாலே” டாஸ்க் வாரத்தில் எல்லோருமே திறமையாக விளையாடியிருந்தாலும் தனது அதீத முயற்சியால் இறுதிச் சுற்றுக்கான தகுதியைப் பெற்றார் சோம் சேகர்.

சோம் சேகர் மாடலிங் துறையை சேர்ந்தவர்; ஒரு குத்துச்சண்டை வீரரும் கூட.

அழகிய தமிழ் மகன்

1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சோம் சேகர் பள்ளிக் கல்வி முதல் உயர் படிப்பு வரை அனைத்தையும் சென்னையில் முடித்துள்ளார்.

பல வழிகளில் முயற்சித்தும் திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இவரது கனவு இன்னும்  நிறைவேறவில்லை.

பாக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட சோம் சேகர் அதனை முறையாக பயின்றுள்ளார். மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட் குத்துச்சண்டை வீரராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

இவர் இரண்டு முறை சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். பிட்னஸ் மாடலாகவும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பல திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துள்ள இவர், பெரிய திரையில் ஹீரோவாக வர வேண்டும் என்ற கனவுக்கு அடித்தளமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமையும் என்று நம்புகின்றார்.

2010 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ‘அழகிய தமிழ் மகன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சோம், 10 ஆண்டுகள் கழித்து விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 ல் பலருக்கும் பரிச்சயம் இல்லாத முகம் என்றால் அது அந்த இல்லத்தில் பத்தாவது போட்டியாளராக சேர்ந்த சோம் சேகர் தான்.

அதிகம் பிரபல்யமில்லாத ஒரு மாடல், ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

“மீண்டும் ஒரு காதல் கதை”, “அக்கு”, “வேலையில்லா பட்டதாரி 2” மற்றும் “சூரரைப் போற்று” போன்ற படங்களிலும் சிறிய சிறிய வேடங்களில் நடித்து இருக்கிறார் சோம்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு மிகப்பெரும் போட்டியாக சோம் சேகர் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த வருடம் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை சோம் கைப்பற்றுவாரா? தெரிந்துகொள்ள அதிக காலம் தேவை இல்லை.