July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழில் முன்னணி நடிகைக்கு பிறந்தநாள் : அவரைப் பற்றி உங்களுக்கு தெரியாத சில விடயங்கள்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 30 அவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைத்தளங்களில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

தெலுங்கு சினிமா பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். ஆனால் இவர் அறிமுகமனது தமிழ் திரையுலகில் தான்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷ் தெலுங்கு நடிகராக இருந்துள்ளார். 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகராவார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். சக முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.

இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கியுள்ளார்.

இதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.  2010ஆம் ஆண்டு “நீ தானா அவன்” தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

2012 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான அட்டகத்தியில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார்.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் 2014ஆம் ஆண்டு வெளியான “ரம்மி”, “பண்ணையாரும் பத்மினியும்” போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அடையாளம் காட்டியது.

இந்த இரு படங்களிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ரஜேஷ் நடித்திருப்பார். இந்த இரு படங்களும் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதற்கு களமான அமைந்தன.

2015ஆம் ஆண்டு வெளியான “காக்கா முட்டை” படம் இவருக்கு தமிழ் தமிழ் சினிமாவில் ஒரு உறுதியான அத்திவாரத்தை போட்டது என்றே சொல்லலாம்.

பல முன்னணி நடிகைகளும் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடிக்க முடியாது என்று பின்வாங்கவே, துணிந்து சென்று அந்த கதாபாத்திரமாகவே மாறி காக்கா முட்டை படத்தில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இத் திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது வென்றார்.

அன்று ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று வரை சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாகவே கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து பாராட்டுகளையும் பெற்றார். இதன்பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கனா.

 

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து, சாதனைப் பெண்ணாக வலம் வந்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மேலும் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

இவர் நடிப்பில் இறுதியாக ஓடிடி தளத்தில் வெளியான க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இன்று அவர் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் வத்திக்குச்சி திரைப்பட இயக்குனர் கிங்சிலின் புதிய திரைப்படமான “ட்ரைவர் யமுனா” என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக  அறிப்பை வெளியிட்டு ரகிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு.