‘கே.ஜி.எஃப்-2 ‘ திரைப்படத்தின் டீசர் வெளியாகி 16 மணி நேரத்திற்குள் மூன்று மில்லியன் லைக்குகளை குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
படத்தின் கதாநாயகனான யாஷ் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் படக்குழுவினர் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் டீசர் வெளியான சில மணிநேரங்களில் கே.ஜி.எஃப் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதனை வைரலாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்து வெற்றியை நிலைநாட்டியது.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியதுடன் மாபெரும் வெற்றியை இந்தப்படம் தேடித்தந்தது.
கே.ஜி.எஃப்-2 டீசர் வெளியான முதல் நாளில் இதுவரை 3 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் இந்தியப் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
விஜய்யின் மாஸ்டர், சர்க்கார், மற்றும் மெர்சல் படங்களின் டீசர்கள் முதல் நாளில் படைத்த சாதனையை கே.ஜி.எஃப்-2 டீசர் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் மொழி கடந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.
அண்மையில் மீண்டும் தொடங்கிய படப்படிப்பில் யாஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல் பாகத்தைப் போலவே இந்தப் பாகமும் மிக மாஸாக இருக்கும் என்பதை டீசர் உறுதிசெய்தது.
இதேவேளை டீசர் வெளியாகி 12 மணி நேரத்திலேயே யூ-ட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.