November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசைப்புயலுக்கு பிறந்தநாள்

இந்திய இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 54-வது பிறந்தநாள் இன்று (6 ஜனவரி).

ஹொலிவூட் முதல் பொலிவூட் வரை தனது இசையால் பல கோடி நெஞ்சங்களை கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் நாளை முன்னிட்டு காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி உள்ள நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், கடவுள் தான் எல்லாமே என உறுதியாக நம்பும் மகனின் தாயே தெய்வம் ஆகிவிட்டதால் அவரின் தாயார் கூடவே இருந்து எல்லாப் புகழுக்கும் ஆசி வழங்குவார் எனவும், நம் ஊருக்கு கிடைத்த உலகப் பெருமையை உளமாற வாழ்த்துவோம் என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து , வெங்கட் பிரபு ,நடிகர் வசந்த் ரவி,பாடலாசிரியர் விவேக், நடிகை காயத்ரி மற்றும் ஏராளமான சினிமா பிரபலங்கள் காமன் டிபியை வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது பாடல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இசையால் உலக மக்களின் இதயங்களை கவர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வாழ்த்தி உள்ளனர்.

சிறுவயது முதல் பல இழப்புகளையும் தடைகளையும் தாண்டி வந்து இன்று உலகளவில் வானில் தெரியும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் .

தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான் தாயின் அரவணைப்பில் இசைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஹார்மோனியம் போன்ற கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்.

இசைஞானியின் இசைக் குழுவில்

இவர் தனது பதினோராவது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்துள்ளார் என்பது சிறப்புக்குரியதே.

தனது பதினொரு வயதிலேயே இவர் தனது எதிர்கால இசை வாழ்க்கையை உறுதி செய்வதற்காக இசைஞானியின் இசைக் குழுவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், ஜாகீர் உசேன், ரமேஷ் நாயுடு மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

பின்னாளில் லண்டன் ட்ரினிட்டி காலேஜ் ஒப் மியூசிக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசையை திறம்பட கற்ற அவர் கிளாசிக்கல் மியுசிக்கில் பட்டம் பெற்றுள்ளார் .

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹிந்தி,ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் .

இசைப்புயல் என பலராலும் அன்பாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது, ஆறு தேசிய திரைப்பட விருதுகள்,பாப்டா , ஒஸ்கர் விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளை அவர் தன்வசம் ஆக்கியுள்ளார் .

ஹொலிவூட் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கிலப் படத்தில் ஜெய்ஹோ என்ற பாடலுக்கு இசையமைத்ததற்காக  இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார்.

இந்த ஒஸ்கார் விருது மேடையில் தான் தனது தாய் மொழியான தமிழை பெருமைப்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான் . தனது தாய்மொழியான தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரத்தை அங்கேயே தமிழ் மொழியின் மூலமாக உலகெங்கும் புகழ்பெறச் செய்தார்.

ஆரம்ப காலத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஹிந்தியில் ரங்கீலா படத்திற்கு இசையமைத்தது மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. அக்காலத்தில் தமிழர்கள் இந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்தது இவரின் அபார இசையமைப்பு திறமையே என கூறவேண்டும்.

இடைக்கிடையே தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசை அமைக்கவும் தவறவில்லை ஏ.ஆர்.ரஹ்மான் .அதனை தொடர்ந்து தான் இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா பட வாய்ப்பு அவருக்கு வந்தது.

இதற்காக அவருக்கு 25,000 தான் சம்பளமும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அந்த வாய்ப்பை அவர் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் என்றே நாம் சொல்லலாம்.

சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் இன்றளவும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்தளவுக்கு தனது இசையெனும் மந்திரத்தால் அனைவரையும் வசியம் செய்தவர் பிறந்த நாள் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் .

சிறந்த இசையமைப்பாளர்

ரோஜா படத்துக்காக இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற உயரிய விருதை மத்திய அரசு அவருக்கு அப்போது வழங்கியது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை கடந்த நூற்றாண்டின் உலகின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக ரோஜாவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மெட்ராஸின் மொசாட் எனவும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பட்டம் சூட்டியது.

ஏ.ஆர். ரஹ்மானின் பம்பாய் படத்தின் பாடல் கேசட்டுகள் அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்பனையாகி  சாதனை படைத்தது.

1997இல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம் ரஹ்மானை ஒப்பந்தம் செய்து ‘வந்தே மாதரம்’ என்ற இசை ஆல்பம் உருவாக்கப்பட்டது. இந்த இசை ஆல்பம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.

ரகுமான் எங்கு தான் மேடை ஏறினாலும் தான் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்துவார். பழைய நினைவுகள் என்றுமே அவருடன் இருக்கும் என்பது அவரது பேச்சுகளில் உணரமுடிகிறது.

இசைதான் அவரது உலகம் என்றாலும் இன்னொரு பக்கம் தனது குடும்பம் அதையும் அவர் விட்டுக்கொடுக்கமாட்டார். இவரது இசை அமைப்பைத் தவிர மீதி நேரங்கள் குடும்பத்தோடு செலவாகும் என்பதும் வெளிப்படையான உண்மை.

மேலும் இசையை, இசைத்துறையில் ஆர்வமுள்ள எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என கருதி இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வெற்றி மட்டுமே படைப்புத் திறனுக்கு காரணமல்ல, இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை இயங்கவைக்கிறது, இறைவனின் எல்லையற்ற கருணை தான் நான் இயங்க முக்கிய காரணம் என்பது ரஹ்மானின் நம்பிக்கையாகும்.

90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் மையம் கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சுமார் 28 ஆண்டுகளை கடந்து உலக வரலாற்றில் சாதனைகளை எழுதிக் கொண்டே இருக்கிறது .

விளம்பரப் படங்கள் உட்பட ஏ.ஆர். ரஹ்மான்அன்றைய நாள்களில் இசையமைத்தவை என அனைத்தும் இன்றுவரை ரசிகர்களின் மனங்களில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

கிராமியப் பாடல்களில் ஜொலிக்க முடியாது என வந்த விமர்சனங்களுக்கு கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா ,உழவன் போன்ற படங்கள் மூலம் சிறப்பாக பதிலளித்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

பொலிவுட்டில் லகான் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் உலக இசை ரசிகர்களின் மனதை தட்டிப்பறித்த இவர், ஹொலிவூட் படங்களுக்கு இசையமைக்க தொடங்கிய மிகக் குறுகிய காலத்தில் தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஒஸ்கர் விருதுகளையும் வென்றார்.

இசைக்கு எல்லைகள் இல்லை என்று கூறப்படுகிறது.அந்த வகையில் இசையை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு பரிமாணங்களில்  மக்களின் மனதையும்  உணர்வையும் தொடும் வகையில் இசை அமைத்து இசைப்பிரியர்களை தன்வசம் ஈர்த்தவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் அதிகமாக பேசமாட்டார் .ஆனால் அவரை விட அவரின் இசை பலமடங்கு பேசும் . ஏ. ஆர். ரஹ்மான் தமிழ் இசைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். இசையுலகில் மேலும் பல சாதனைகளைப் புரிய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.