
தமிழ் திரைப்படமான கோலமாவு கோகிலா ஹிந்தி மொழியில் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் 45 நாட்கள் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது.
தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படமான கோலமாவு கோகிலா,வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கோலமாவு கோகிலா படம் கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. 2018ஆம் ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் காமெடி கலந்த திரைப்படமாக வெளிவந்து சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.