January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 திரைப்படம்

மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு மோகன்லால், இமீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான த்ரிஷ்யம், திரைப்பட உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்ட யதார்த்த படமாக போற்றப்பட்டது.

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையோடு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது த்ரிஷ்யம் பாகம் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படம் என தனி முத்திரை பதித்த திரைப்படமாக இந்த திரிஷ்யம் பாகம் 1 கூறப்படுகிறது.இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகுதான் திரிஷ்யம் படம் தமிழ், ஹிந்தி,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .

கமல்ஹாசன்,கெளதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தக் கதைக்களம் தமிழிலும் மிகப் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், தொடுபுழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருஷ்யம் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். .

ஒரு குடும்பப் பின்னணியைத் தழுவிய த்ரில்லர் கதைக் கருவை வைத்து த்ரிஷ்யம் 2 படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசரை புத்தாண்டு தினத்தையொட்டி நடிகர் மோகன்லால் வெளியிட்டிருக்கிறார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

திருஷ்யம் பாகம்-1 கொடுத்த அந்த எதிர்பார்ப்பு திருஷ்யம் பாகம் 2ல் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேரளாவில் கொரோனா அச்சத்தால் தற்போது வரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.

திரிஷ்யம் படத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் த்ரிஷ்யம் 2 இலும் நடித்துள்ளனர். முதல் பாகம் பட்டிதொட்டியெல்லாம் ஓடி பிரபல்யமான நிலையில்,பாகம் 2 குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள் .