
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகிய திரைப்படம் ‘சியான்கள்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
பொதுவாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வயோதிபர்களை சியான்கள் என அழைக்கும் வழக்கமுள்ளது. அவ்வாறு 7 முதியவர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சியான்கள்.
இந்த ஏழு பேரும் அவர்களின் குடும்பத்தால் வெறுக்கப்பட்டு வெளியயேற அவர்களில் இருவர் இறந்து போகின்றனர்.
மீதமுள்ள சியான்கள் தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கின்றனர். அவர்களின் ஆசைகள் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதையாகும்.
குறிப்பாக முதியோர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என கூறும் இயக்குநர் படத்தை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
இந்த 7 முதியவர்களும் தமது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தில் வாழ்ந்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
வைகரை பாலன் இயக்கத்தில் கரிகாலன், நிஷா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த கதையில் கரிகாலன், நிஷா இடையே அழகான காதல் கதை ஒன்றையும் உருவாக்கியுள்ளார் இயக்குநர். மேலும் இந்தபடத்தின் தயாரிப்பாளரான கரிகாலன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த சியான்கள் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பாகவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யதார்த்தமான மண் வாசனை சார்ந்த கதைக் களமாகவும் இருக்கும் சியான்கள் திரைப்படம் மேலும் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.