October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயம் ரவியின் “பூமி”: அதிரவைக்கும் ட்ரெய்லர்

இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள  ‘பூமி’ படத்தின் அசத்தலான ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பூமி திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட தயாரான நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் “டிஸ்னி ஹொட்ஸ்டார்” தளத்தில் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

திரையரங்குகள் பாதி அளவில் திறக்கப்பட்ட நிலையில் 2021 ஆண்டில் புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பும் தகர்ந்து போயிருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ரசிகர்களும் வாழ்த்தும் அளவில் இந்த பூமி திரைப்பட ட்ரெய்லர் அமைந்திருக்கிறது என்றே கூறலாம்.

பொதுவாக ஒரு விவசாயின் போராட்டம் என்றில்லாமல் ஒரு இளம் விஞ்ஞானியின் விவசாயத்திற்கான போராட்டத்தை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறது பூமி படம்.

பூமி பட ட்ரெய்லரை பார்க்கும் போதே படம் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஆவலையும் தூண்டியுள்ளது.

இறுதியாக ஜெயம் ரவி நடித்திருந்த கோமாளி திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பூமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நீ இந்த உலகத்தை எத்தனை ஆயிரம் அடி உயரத்திலிருந்து பார்த்திருப்ப? 7 லட்சம் கிலோ மீட்டர் உயரத்திலிருந்து இந்த உலகத்தை பார்த்தவன் நான், நமக்கு இந்த உயரத்தை எல்லாம் பார்த்தா பயம் இல்லை” என்ற ஜெயம் ரவியின் அழுத்தமான வசனங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் ட்ரெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

நிச்சயமாக பொங்கலுக்கு வெளியிடப்படும் படங்களில் பூமி படமும் நிச்சயமாக வெற்றிபெறும் என நாம் எதிர்பார்க்கலாம்.