
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது வருட நினைவு தினத்தையொட்டி தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,மரியாதைக்குரிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடத்தில் நடித்தது ஒரு மிகப் பெரும் பொறுப்பு எனவும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு இயக்குனர் ஏ.எல் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றிகள் என பதிவிட்டுள்ளார். இந்த படங்களை மதிப்பிற்குரிய தலைவரின் நினைவு நாளில் பதிவிடுகிறேன் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களில் எம்ஜிஆர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்துவது மற்றும் வணக்கம் தெரிவிப்பது என சில புகைப்படங்களை அரவிந்தசாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இவை அனைத்தும் தலைவி படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஏ.எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் தலைவி வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி நடித்திருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அச்சு அசலாக எம்ஜிஆர் போன்றிருக்கும் தனது படங்களை அரவிந்தசாமி வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.