இந்திய சினிமாத்துறையில் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடிப்பதென்றால் இலகுவான விடயமல்ல. அந்த வகையில் நடிகை தமன்னா காலில் சக்கரம் கட்டியது போல பல மொழிகளிலும் நடிகையாக சூழன்று கொண்டிருப்பவர்.
இவர் தனது 31 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைப்பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் தமன்னாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாடலிங்கில் தொடங்கி இன்று சினிமாத்துறை வரை தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வருபவர் யதார்த்த நடிப்பழகி தமன்னா.
ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார் .
தமிழ், தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி,கன்னடம், மராத்தி என பல மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடிப்பவர் தமன்னா.
முதல் மூன்று படங்களிலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழில் கேடி, வியாபாரி ,கல்லூரி ஆகிய படங்கள் நடித்ததன் மூலம் தன்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
2009 ஆம் ஆண்டு தனுஷூடன் இணைந்து படிக்காதவன் படத்தில் தமன்னா நடித்தார். இது தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தார். அந்த படமும் தமிழில் 100 நாட்கள், தெலுங்கில் 200 நாட்கள், மலையாளத்தில் 200 நாட்கள் என ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பின்னர் அதே ஆண்டு தமிழில் ஆனந்தத்தாண்டவம், பரத்துடன் கண்டேன் காதலை படங்களில் தொடர்ந்து நடித்தார் .
2010ஆம் ஆண்டு தமிழில் கார்த்தியுடன் பையா படத்தில் இணைந்து நடித்தார் தமன்னா.அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு சுறா, தில்லாலங்கடி படங்களில் நடித்தார்
2011 ஆம் ஆண்டில் கார்த்தியுடன் சிறுத்தை,வேங்கை போன்ற படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகி ஆனார்.
பின்னர், வீரம், பாகுபலி1 ,பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்தார். இதில் பாகுபலி படம் தெலுங்கு ,ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து 2000 கோடி ரூபாய் வசூலை குவித்தது. பின்னர் பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து தமன்னாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன .
தோழா, கத்திச்சண்டை போன்ற வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வரத் தொடங்கினார்.
தர்மதுரை படம் 100 நாட்கள் ஓடி பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது.
பின்னர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் , ஸ்கெட்ச் , கண்ணே கலைமானே ,ஆக்சன்,பெட்ரோமெக்ஸ்,தேவி 1,தேவி2 என தமிழ் திரைப்படங்களில் கலக்கியவர்.
தற்போது தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. 7 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் இவர்.
இதுவரை சுமார் 74 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தமன்னா,15 வருடகால சினிமாத்துறையில் தனியாக ஜொலித்து வருகிறார்.
அந்த வகையில் தமன்னா இன்றும் தனது இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை எனறுதான் சொல்ல வேண்டும். அவரின் திரைப் பயணம் தொடர வாழ்த்துவோம்.