மலையாள நடிகர் பகத் பாசில், நயன்தாரா இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா ,நடிகர் பகத் பாசில் இணைந்து நடிக்கும் புதிய படத்தை பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘பாட்டு’ என்ற தனது படத்தில் பகத் பாசில் கதாநாயகனாகவும்,நயன்தாரா கதாநாயகியாகவும் இணைவதில் மகிழ்ச்சியடைவதாக படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இந்த படம் குறித்த அறிவிப்பை நடிகை நயன்தாராவும் பட போஸ்டருடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Paattu A film by Alphonse Puthren 🎥 pic.twitter.com/YlKcusA6qk
— Nayanthara✨ (@NayantharaU) December 20, 2020
இந்த படம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குனர் கூறியிருக்கிறார்.
நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நேரம். இந்த திரைப்படம் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவானது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டில் சூப்பர் ஹிட் படமான பிரேமம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இவர்.
பிரேமம் திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்ல அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. வெற்றிப்படமான இது நல்ல வசூலையும் அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
அழகிய காதல் கதையை இதில் கூறியிருந்தார் இயக்குனர். இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய்பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தற்போது ‘பாட்டு’ என்ற படத்தை இயக்கவுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். முன்னணி நடிகர்களை வைத்து படங்களை உருவாக்கும் போது அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பது யாவரும் அறிந்ததே.
இயக்குனரின் இந்த அறிவிப்பை அடுத்து பாட்டு படத்திற்கான அடுத்த தகவல்கள் எப்போது வரும் என லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
தற்போது நிழல் என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நயன்தாரா மீண்டும் ஒரு மலையாள படமான பாட்டு என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தமிழ் படங்களில் தொடர் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தற்போது தனது தாய் வீடான மலையாள பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.