November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழின் முதல் டைம் லூப் திரைப்படம்: ‘ஜாங்கோ’ டீசர் வெளியீடு

சி.வி குமார் தயாரிப்பில் ‘ஜாங்கோ’ என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது. இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, தெகிடி, இன்று நேற்று நாளை ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்தான் பிரபல தமிழ் தயாரிப்பாளர் சி.வி குமார்.

சி.வி குமார் என்றாலே குறைவான பட்ஜெட், வித்தியாசமான கதை, பார்க்க ஆவலைத் தூண்டும் திரைக்கதை என படத்தை நேர்த்தியாக தயாரித்து இருப்பார்.

இந்த வரிசையில் தற்போது “ஜாங்கோ” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இது தமிழ் சினிமாவில் முதல் டைம் லூப்ஸ் திரைப்படமாகும்.

பொதுவாக தமிழ் சினிமாவில் அறிவியல் சார்ந்த கதைகள் மற்றும் டைம் டிராவல் கதைகள் எடுப்பது மிகவும் குறைவு. அதிலும் டைம் லூப் அடிப்படையாகக் கொண்ட படம் இதுவரை வெளியாகவில்லை.

டைம் லூப் என்பது இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கும் நேரம், மாலை 6 மணிக்கு அல்லது ஒரு சம்பவத்தில் முடிந்தால் திரும்பவும் இன்று காலை 7 மணிக்கே தொடங்கும், சுழற்சிமுறையில் மறுபடியும், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் இப்படிப்பட்ட அறிவியல் புனைவை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியிருக்கிறது.

இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு, கார்த்திக் கே. திலக் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக சான் லொகேஷ், ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்தும் பணியாற்றியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் கருணாகரன் மிருணாளினி ரவி, நக்கல்டிஸ் தனம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சி.வி குமார் தயாரிப்பு என்பதால் ஆர்வத்தை தூண்டும் வித்தியாசமான கதை என்ற நம்பிக்கையோடு படத்தைப் பார்க்கலாம்.