நடிகை ஷகிலா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை,சினிமாத்துறையில் அவர் முகம் கொடுத்த இன்னல்கள் என இவற்றை மையப்படுத்தி ஹிந்தியில் தயாராகியுள்ளது அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.
தற்பாேது இந்தத் திரைப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது.
தமிழ், மலையாளம்,தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஷகிலா.
90 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை சேர்த்து புகழ் பெற்ற ஷகிலா,மலையாளத்தில் வெளியான பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
நடிகை ஷகிலாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றாலும், அவர் தனது நிஜ வாழ்க்கையில் முகம் கொடுத்த சவால்கள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.
ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
நடிகை ஷகிலாவின் வலிமிகுந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் அமையுமென கூறப்படுகிறது. வயது வந்தோருக்கான படங்களில் நடித்தபோது அவரது குடும்பத்தினர் புறக்கணித்தது என அவரது வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் திரும்பிபார்க்க வைக்கவுள்ளது இந்தத் திரைப்படம்.
ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது.
நடிகை ஷகிலா மலையாள படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார் என்பதால், காட்சிகளும் அவ்வாறு அமைய வேண்டுமென நினைத்து கர்நாடகாவின் தீர்த்தஹள்ளி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
சரவண பிரசாத்,ஷிம்மி நன்வாணி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஷகிலாவாக , ரிச்சா சத்தா என்பவர் நடித்துள்ளார்.