October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யதார்த்த படைப்புகளின் கலைஞனுக்கு பிறந்த நாள் இன்று…

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு யதார்த்தமான கிராமத்து வாழ்வியலை அழகாக பதிவு செய்தவர் யார் என்று பார்த்தால் அது இயக்குனர் சேரன் தான் .இன்று இவர் தனது 50 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சமூகவலைத்தளங்களில், திரைப்பிரபலங்களும்,ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் இருந்து சென்னை வந்து ,பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு தரமாக இயக்குனராக ,சிறந்த நடிகராக வருவதென்றால் அலு இலகுவான காரியமல்ல.

பல தடைகளைத் தாண்டி தமிழ் மக்கள் மனதில் ஒரு சிறந்த படைப்பாளியாக உட்கார்ந்திருக்கிறார் சேரன்.

பாரதி கண்ணம்மா என்ற அற்புதமான படத்தின் மூலம் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தியவர் இவர்.

தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர்பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி,பொக்கிஷம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கின்றார்.

இயக்குனராக மட்டுமன்றி நடிகராக சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம், ராமன்தேடியசீதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் ,மூன்று பேர் மூன்று காதல், திருமணம் ஆகிய படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

இதில் சேரன் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற படங்களுக்கு தேசிய விருதையும் தட்டிச் சென்றார். அத்துடன் மேலும் 5 படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

ஒரு இயக்குனராக சாதியக் கட்டமைப்பும் அதில் மலரும் காதலையும் சொன்னவர் மேலும் பாமர மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளையும் அரசியல்வாதிகள் உணர வேண்டும் என்று தேசியகீதம் தந்தவர்.

வெளிநாடு சென்றால் மட்டுமல்ல உள்ளூரில் கடுமையாக உழைத்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தன் படத்தின் மூலம் தந்தவர் .

இப்படி அவரின் ஒவ்வொரு படைப்பும் சமூகத்திற்கு தேவையான தவிர்க்க முடியாத விஷயங்களை முன்னிறுத்தி வழங்கியிருந்தார்.

சிறந்த கதைக்களத்துடன் கூடிய படங்களைத் தந்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு இன்றும் குரல் கொடுத்துவரும் சேரன் அவர்களின் உன்னத பணி தொடர வாழ்த்துவோம்.

https://twitter.com/offBharathiraja/status/1337639037138452481?s=20