இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ்,ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
தற்போது இந்த படத்தின் பெயர் தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தின் பெயரை மாற்ற வேண்டுமென நடிகர் சிவாஜி நலப் பேரவை நடிகர் தனுஷிற்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடித்தில் ‘கர்ணன்’ என்றாலே எல்லோருடைய நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம்தான்.
ஒரு படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும்,மனசாட்சிப்படி,நியாயப்படி சில பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது என கூறப்பட்டுள்ளது.
மேலும் தனுஷ் நடித்த சில படங்கள் சிவாஜி கணேசன் நடித்த படப்பெயர்களில் வெளிவந்ததையும்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திருவிளையாடல், உத்தமபுத்திரன்,ஆண்டவன் கட்டளை,ராஜா,பச்சை விளக்கு,சரஸ்வதி சபதம் என நடிகர் திலகம் நடித்த படப்பெயர்களில் மீண்டும் படங்கள் வெளிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் திரைப்படங்களின் பெயர்கள் தான் படத்தின் கதைக்களத்தை காலாகாலத்திற்கும் தாங்கி நிற்கின்றன. ஆகையால் பழைய பெயர்களை புதிய படங்களுக்கு வைப்பதை தவிர்க்க வேண்டுமென சிவாஜி பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் கர்ணன் படம் என்றாலே தனித்துவமிக்கது. கர்ணன் என்றால் கொடை வள்ளல். ஆனால் தாங்கள் நடிக்கும் படத்தின் கதையோ உரிமைக்காக போராடும் ஒருவருடைய கதை எனவும் ஆகையால் கர்ணன் பெயரை மாற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சமூகக் கதைக்கு கர்ணன் பெயர் வைத்து தாங்கள் நடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்,அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்களை மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் அனைவரது மனங்களும் புண்படும் வகையில் இருப்பதால் கர்ணன் என்ற பெயரை தனுஷ் நடிக்கும் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என சிவாஜி நலப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.