November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சோனு சூட்டுக்கு இங்கிலாந்து பத்திரிகை கௌரவம்

ஆசியாவின் மிகச் சிறந்த சினிமா ஆளுமைகளின் முதலிடத்தில் சோனு சூட் இடம் பெற்று இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என இந்தியாவின் முதன்மை மொழிகளில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கும் இவர், உருது, மாண்டரின் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, தேவி 2 ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் என்றும் தெலுங்கில் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, சமந்தா என்றும் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன் என்றும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ்,பகத் பாசில், துல்கர் சல்மான் என்றும் இந்தியா மட்டுமல்லாது ஆசியா முழுவதும் உள்ள 50 சினிமா ஆளுமைகளில் முதலிடத்தில் சோனு சூட் தேர்வாகியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ என்ற வாரப்பத்திரிகை இந்த முதல் இடத்தை அவருக்கு வழங்கி கௌரவித்து இருக்கிறது.

படத்தில் வில்லனாக தோன்றும் சோனு சூட் நிஜத்தில் இரக்க குணமும் மனிதநேயம் நிறைந்த ஹீரோவாக திகழ்கிறார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது, அறுவை சிகிச்சைக்கு தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு சொந்த செலவில் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்வது, மலைகிராம மாணவர்களுக்கு உதவுவதற்காக சொந்த செலவில் செல்போன் டவர் அமைத்து கொடுத்தது என பிறருக்கு தெரிந்தும் தெரியாமலும் நிறைய உதவிகளை செய்தவண்ணம் இருக்கிறார்.

பொதுவாக இவ்வாறு உதவி செய்வதற்கு டிரஸ்ட் களை ஏற்படுத்தி ( வருமான வரி விலக்கு பெறுவதற்காகவும்) மற்றவர்களிடம் வசூல் செய்தும் உதவிகளை செய்வார்கள்.

ஆனால் இவர் சற்றே வித்தியாசமாக தன் பெயரிலும் தன் மனைவியின் பெயரிலும் இருந்த எட்டு சொத்துக்களை சுமார் 10 கோடிக்கு அடமானம் வைத்து, அந்தப் பணத்தில் இத்தகைய உதவிகளை செய்து இருக்கிறார் .

இதை கேள்விப்படும் பொழுது அவரின் இரக்க சிந்தனையும்,உயர்ந்த உள்ளமும் மனிதநேயமும் எதிர்பார்ப்பில்லாத தன்மையும் நம்மை நெகிழச் செய்கிறது.

ஈஸ்டன் ஐ வரிசைப்படுத்தி இருக்கும் இந்தப் பட்டியலில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் 7 வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

இவர்களைப் போன்ற இரக்க குணம் நிறைந்த மற்றவருக்கு உதவும் மனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.