நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடனம், நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சில்க் ஸ்மிதா.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் நடிகை சில்க் ஸ்மிதா.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற சில்க் ஸ்மிதா இன்றுவரை ரசிகர்கள் மனதில் இருந்தும்,திரையுலகில் இருந்தும் அழிக்கமுடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறார் .
இந்நிலையில் புகழ்பெற்ற நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு அவள் அப்படித்தான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை அனுஷ்யா பரத்வாஜ் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,புதிய ஆரம்பம் கோலிவுட், தமிழ் , சில்க் ஸ்மிதாவின் தோற்றம் என தன் படத்தை வெளியிட்டு இருக்கிறார் .
ஆனால் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமானது இதற்கு முன்பே டர்ட்டி பிக்சர் என்னும் தலைப்பில் ஹிந்தியில் படமாக்கப்பட்டது.
இதில் முன்னணி நடிகையான வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து பெரும் புகழைத் தேடிக்கொண்டார்.
இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியான போது 100 கோடி ரூபாய்க்கும் மேல் நல்ல வசூலை அள்ளிக் குவித்தது.