இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
‘ரைட்டர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறார் .
96 படப்புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரைட்டர்’ திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி, நேற்றிலிருந்து படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். சமுத்திரக்கனி ஏற்கனவே பா.ரஞ்சித்தின் காலா படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக லெனின் பாரதி, சுரேஷ் மாரி ,அகிரன் மோசஸ், மாரிசெல்வராஜ், பிராங்க்ளின் ஜேக்கப் ஆகியோர் 5 படங்களை இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்த ஐந்து படங்களையும் நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
அட்டகத்தி ,மெட்ராஸ், கபாலி ,காலா படங்களின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இப்படம் வெளியாகி நல்ல வசூலை குவித்ததோடு பாராட்டுகளையும் பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் தன்வசமாக்கியது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்தார் பா.ரஞ்சித் . இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பா. ரஞ்சித் தான் மூன்றாவதாக தயாரிக்கும் படத்தின் அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் .
Shooting commenced today for our first Co-Production with @GRfilmssg & @LRCF6204
Starring @thondankani as #Writer✍@Tisaditi @abhay_muvizz @PiiyushSingh @frankjacobbbb @doppratheep @govind_vasantha @editor_mani @officialneelam @kabilanchelliah @RIAZtheboss@pro_guna pic.twitter.com/sJjtQWdwQj
— pa.ranjith (@beemji) December 7, 2020