January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரம்

தளபதி விஜயின் பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய், சென்னை-28 ,வாமனன், சுப்ரமணியபுரம் ,எங்கேயும் எப்போதும், வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்

இவர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற திரைப்படம் வெளியானது.இதன் பின்னர் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

தற்போது நடிகர் ஜெய் ,இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் மாறி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது .

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் டீசர், பாடல் காட்சிகள் தற்போது வெளியிடப்பட உள்ளதாகவும் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் கூறியுள்ளார்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அற்புதமானதாக இருந்ததாக நெகிழ்ந்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான ஈடுபாடும் அபாரமாக இருந்ததாகவும் ,மிக கடினமான கதாபாத்திரத்தை கூட முழுதாக உள்வாங்கி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக இயக்குனர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இந்த பிரேக்கிங் நியூஸ் படமானது ஜெய்யை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்துச் செல்லும் எனவும் கூறியுள்ளார்.

இப்படத்தில் நடிகை பானு ஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். மகதீரா ,சுறா படத்தில் நடித்த தேவ் கில், வேதாளம் படத்தில் நடித்த ராகுல் தேவ் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள் .

இந்த திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதேநேரம் ஒரு தரமான படைப்பாகவும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என நம்பப்படுகிறது.

படத்தின் பெரும்பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக இருக்கும் எனவும் இதனால் 450 கிராபிக்ஸ் பணியாளர்கள் பிரேக்கிங் நியூஸ் படத்தில் பணிபுரிந்து வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.